Skip to content

செக்ஸ் தொல்லையிலிருந்து என்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?

செக்ஸ் தொல்லையிலிருந்து என்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?

பைபிள் தரும் பதில்

 பைபிளிலுள்ள ஞானமான வார்த்தைகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் நடைமுறையான ஆலோசனைகளைக் கவனியுங்கள்:

  1.   நேரத்தை வீணடிக்காமல் நன்றாக வேலை செய்யுங்கள். உங்களோடு வேலை செய்கிறவர்களிடம் கனிவாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்ளுங்கள், அதேசமயத்தில் அவர்களுடைய ஆசைக்கு இணங்கிவிடத் தயாராக இருப்பதுபோல் ஒட்டி உறவாடாதீர்கள்.—மத்தேயு 10:16; கொலோசெயர் 4:6.

  2.   அடக்கமாக உடை உடுத்துங்கள். உடல் அங்கங்களைக் காட்டும் விதத்தில் கவர்ச்சியாக உடை உடுத்துவது “தவறான சிக்னலை” அனுப்பும். “அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும்” அலங்கரித்துக்கொள்ளும்படிதான் பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது.—1 தீமோத்தேயு 2:9.

  3.   நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள். எதிர்பாலார் தங்களோடு நெருங்கிப் பழகுவதை அல்லது செக்ஸ் வைத்துக்கொள்ள ஜாடைமாடையாக அழைப்பதைச் சகித்துக்கொள்கிறவர்களோடும், அதையெல்லாம் விரும்புகிறவர்களோடும் நீங்கள் நிறைய நேரம் செலவிட்டீர்கள் என்றால், எதிர்பாலார் உங்களோடும் அதே மாதிரி பழக ஆரம்பித்துவிடுவார்கள்.—நீதிமொழிகள் 13:20.

  4.   முகம்சுளிக்க வைக்கிற பேச்சுகளைத் தவிருங்கள். மற்றவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது “அசிங்கமான கதைகள், முட்டாள்தனமான பேச்சு, ஆபாசமான நகைச்சுவை” போன்றவை தலைதூக்கினால், உடனே அங்கிருந்து நடையைக் கட்டுங்கள்.—எபேசியர் 5:4, காட்ஸ் வார்ட் பைபிள்.

  5.   இணங்க வைத்துவிடும் சூழ்நிலையைத் தவிருங்கள். உதாரணத்திற்கு, நியாயமான காரணம் இல்லாமல், வேலை நேரத்திற்குப் பிறகும் வேலை செய்யும்படி சொல்லப்பட்டால், உஷார்!—நீதிமொழிகள் 22:3.

  6.   கறாராக இருங்கள், நேரடியாகப் பேசுங்கள். உங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் நபரிடம், அவர் நடந்துகொள்கிற விதம் உங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று தெளிவாகச் சொல்லிவிடுங்கள். (1 கொரிந்தியர் 14:9) உதாரணத்திற்கு, “சும்மா சும்மா என்மேல உரசிட்டே இருக்காதீங்க, எனக்கு எரிச்சலா இருக்கு” என்று சொல்லலாம்; அல்லது, என்ன நடந்தது, அப்போது எப்படி உணர்ந்தீர்கள், இனி என்ன செய்யும்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பதையெல்லாம் விவரமாக ஒரு கடிதத்தில் எழுதி அவருக்குத் தரலாம். உங்களுடைய ஒழுக்கநெறிகளும் மத நம்பிக்கைகளும்தான் உங்களுடைய நடத்தைக்குக் காரணம் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.—1 தெசலோனிக்கேயர் 4:3-5.

  7.   உதவி கேளுங்கள். செக்ஸ் தொல்லை தொடர்ந்தால், நம்பிக்கைக்குரிய நண்பரிடமோ, குடும்ப அங்கத்தினரிடமோ, சக பணியாளரிடமோ, அனுபவமிக்க ஆலோசகரிடமோ மனம்விட்டுப் பேசுங்கள். (நீதிமொழிகள் 27:9) செக்ஸ் தொல்லைக்கு ஆளான பலர், கடவுளிடம் ஜெபம் செய்ததால் பலம் பெற்றிருக்கிறார்கள். இதுவரை நீங்கள் இதைப் பற்றி ஜெபம் செய்திருக்கிறீர்களா? ஜெபத்தின் மகிமையைக் குறைவாக எடைபோட்டு விடாதீர்கள்; இந்த விஷயத்தைப் பற்றி ஜெபம் செய்தீர்களென்றால், ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாகிய’ யெகோவாவிடமிருந்து கண்டிப்பாக உதவி கிடைக்கும்.—2 கொரிந்தியர் 1:3.

 வேலை செய்யும் இடங்களில் லட்சக்கணக்கானோர் செக்ஸ் தொல்லை காரணமாக ரொம்பவே அவஸ்தைப்படுகிறார்கள், ஆனால் பைபிள் விஷயங்கள் அவர்களுக்கு உதவி செய்யும்.