என் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்ன?
பைபிள் தரும் பதில்
கடவுளை ஒரு நிஜ நபர்போல் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அவரிடம் நெருங்கிவர வேண்டும், அவர்மேல் அன்பு காட்டி, முழு இதயத்தோடு அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளுடைய சித்தம். (மத்தேயு 22:37, 38; யாக்கோபு 4:8) கடவுளுடைய சித்தத்தை எப்படிச் செய்வதென்று இயேசுவின் வாழ்க்கையிலிருந்தும் போதனைகளிலிருந்தும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். (யோவான் 7:16, 17, அடிக்குறிப்பு) கடவுளுடைய சித்தத்தைப் பற்றி இயேசு வெறுமனே பேசவில்லை, அதன்படி வாழ்ந்தார். சொல்லப்போனால், “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே” இந்தப் பூமிக்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.—யோவான் 6:38, தமிழ் O.V. (BSI) பைபிள்.
என் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்னவென்று தெரிந்துகொள்ள ஏதாவது விசேஷ அடையாளமோ, தரிசனமோ, அழைப்போ வேண்டுமா?
வேண்டாம், ஏனென்றால், மனிதகுலத்துக்குக் கடவுள் சொல்ல நினைக்கிற செய்தி பைபிளில் இருக்கிறது. “எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு . . . எல்லா விதமான தகுதிகளையும்” பெற உங்களுக்கு என்ன தேவையோ அது பைபிளில் இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) உங்கள் விஷயத்தில் கடவுளுடைய சித்தம் என்னவென்று தெரிந்துகொள்வதற்காக, பைபிளோடு சேர்த்து உங்கள் ‘சிந்திக்கும் திறனையும்’ நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்.—ரோமர் 12:1, 2; எபேசியர் 5:17, அடிக்குறிப்பு.
கடவுளுடைய சித்தத்தை என்னால் நிஜமாகவே செய்ய முடியுமா?
நிச்சயம் செய்ய முடியும்; ஏனென்றால், “தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:3, ERV) அதற்காக, கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது எப்போதுமே எளிது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அப்படிக் கீழ்ப்படியும்போது கிடைக்கிற பலன்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்காக நாம் படுகிற சிரமமெல்லாம் ஒன்றுமே இல்லை. “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!” என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.—லூக்கா 11:28.