கடவுளுடைய அரசாங்கம் என்பது என்ன?
பைபிள் தரும் பதில்
கடவுளுடைய அரசாங்கம் என்பது யெகோவா தேவனால் நிறுவப்பட்ட ஒரு நிஜ அரசாங்கமாகும். “கடவுளுடைய அரசாங்கம்” பைபிளில் “பரலோக அரசாங்கம்” என்றுகூட அழைக்கப்படுகிறது; காரணம், அது பரலோகத்திலிருந்து ஆட்சி செய்கிறது. (மாற்கு 1:14, 15; மத்தேயு 4:17) மனித அரசாங்கங்களில் இருக்கிற பல அம்சங்கள் இதில் இருந்தாலும், அவற்றைவிட இது எல்லா விதத்தில் தலைசிறந்தது.
ஆட்சியாளர்கள். இந்த அரசாங்கத்தில் இயேசு கிறிஸ்துவைத்தான் ராஜாவாகக் கடவுள் நியமித்திருக்கிறார், எந்தவொரு மனித ஆட்சியாளருக்கும் இல்லாதளவுக்கு அத்தனை அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். (மத்தேயு 28:18) இந்த அதிகாரத்தை நல்ல விஷயத்திற்கு மட்டுமே இயேசு பயன்படுத்துகிறார்; தான் ஒரு நம்பகமான, கரிசனையான தலைவர் என்பதை அவர் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறார். (மத்தேயு 4:23; மாற்கு 1:40, 41; 6:31-34; லூக்கா 7:11-17) பரலோகத்தில் தன்னோடு சேர்ந்து ‘ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வதற்கு’ கடவுளுடைய வழிநடத்துதல்படி எல்லா தேசங்களிலிருந்தும் ஆட்களை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 5:9, 10.
காலப்பகுதி. மாறி மாறி வருகிற மனித அரசாங்கங்களைப் போல இல்லாமல், கடவுளுடைய அரசாங்கம் “என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானியேல் 2:44.
குடிமக்கள். எந்த வம்சாவளியில் வந்திருந்தாலும் சரி, எந்த ஊரில் பிறந்திருந்தாலும் சரி, கடவுள் எதிர்பார்க்கிற காரியங்களைச் செய்கிற ஒவ்வொருவருமே கடவுளுடைய அரசாங்கத்தில் குடிமகனா(ளா)க வாழ முடியும்.—அப்போஸ்தலர் 10:34, 35.
சட்டங்கள். கடவுளுடைய அரசாங்கத்தின் சட்டங்கள் (அல்லது கட்டளைகள்), தவறான நடத்தையைத் தடை செய்வது மட்டுமல்லாமல், அதன் குடிமக்களை நல்ல ஒழுக்கமுள்ளவர்களாகவும் ஆக்குகிறது. உதாரணத்திற்கு, “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை. இதோடு சம்பந்தப்பட்ட இரண்டாம் கட்டளை இதுதான்: ‘உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்’” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 22:37-39) கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் உள்ள அன்பு, கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களைத் தூண்டியெழுப்பி, பிறருடைய நன்மைக்காகப் பாடுபட வைக்கிறது.
கல்வி. கடவுளுடைய அரசாங்கம் தன்னுடைய குடிமக்களுக்கு உயர்ந்த தராதரங்களை வைக்கிறது என்றாலும், அவற்றை எப்படி எட்டுவது என்றும்கூட மக்களுக்கு அது கற்பிக்கிறது.—ஏசாயா 48:17, 18.
பணி. கடவுளுடைய அரசாங்கம் தன்னுடைய குடிமக்களைச் சுரண்டி தன்னுடைய ஆட்சியாளர்களைச் செல்வந்தர்களாக ஆக்குவதில்லை. மாறாக, கடவுளுடைய விருப்பத்தை அது நிறைவேற்றும்; கடவுளை நேசிக்கிற ஆட்கள் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வார்கள் என்ற அவருடைய வாக்குறுதியையும் அது நிறைவேற்றும்.—ஏசாயா 35:1, 5, 6; மத்தேயு 6:10; வெளிப்படுத்துதல் 21:1-4.