இயேசு எப்போது பிறந்தார்?
பைபிள் தரும் பதில்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் எதுவென்று பைபிள் எங்கேயுமே குறிப்பிடவில்லை; இதைத்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில புத்தகங்களும் சொல்கின்றன:
“கிறிஸ்து எந்தத் தேதியில் பிறந்தார் என்பது யாருக்குமே தெரியாது.”—நியு கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா.
“கிறிஸ்துவின் பிறந்த நாள் எதுவென்று யாருக்குமே துல்லியமாகத் தெரியாது.”—என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் எர்லி க்ரிஸ்டியானிட்டி.
‘இயேசு எப்போது பிறந்தார்?’ என்ற கேள்விக்கு பைபிள் நேரடியாகப் பதில் சொல்வதில்லை என்றாலும், அவர் பிறந்த சமயத்தில் நடந்த இரண்டு சம்பவங்களைப் பற்றி அது விவரிக்கிறது; அவர் டிசம்பர் 25-ஆம் தேதி பிறக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அந்தச் சம்பவங்கள் நிறைய பேருக்கு உதவியிருக்கின்றன.
குளிர்காலத்தில் பிறக்கவில்லை
பெயர்ப்பதிவு. இயேசு பிறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்குமுன், ரோம அரசனான அகஸ்து “குடிமக்கள் எல்லாரும் பெயர்ப்பதிவு செய்ய வேண்டும்” என்று கட்டளையிட்டார். அதனால், எல்லா மக்களும் “தங்கள் சொந்த நகரங்களுக்கு” போக வேண்டியிருந்தது; இதற்கு ஓரிரு வாரங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்திருக்கலாம். (லூக்கா 2:1-3) வரி வசூலிப்பு சம்பந்தமாகவும், படையில் ஆள் சேர்ப்பது சம்பந்தமாகவும் தேவையான விவரங்களைப் பெறுவதற்காக அகஸ்து ஒருவேளை அந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கலாம்; அந்தக் கட்டளை வருஷத்தின் எந்தச் சமயத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது மக்களுக்குக் கடுப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும். அப்படியிருக்கும்போது, அகஸ்து நிச்சயமாகக் குளிர்காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும்படி மக்களைக் கட்டாயப்படுத்தி மேலுமாக அவர்களைக் கோபப்படுத்தியிருக்க மாட்டார்.
ஆடுகள். “மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, ராத்திரியில் தங்களுடைய மந்தைகளைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.” (லூக்கா 2:8) “பஸ்கா பண்டிகைக்கு முந்தின வாரத்திலிருந்து [மார்ச் கடைசியிலிருந்து] நவம்பர் மத்திபம்வரை” “மந்தைகள் வயல்வெளியில் தங்க வைக்கப்பட்டன. . . . குளர்காலத்தில் தொழுவத்துக்குள் தங்க வைக்கப்பட்டன; அப்படியானால், குளிர்காலத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் தேதி தவறென்று தெளிவாகத் தெரிகிறது; ஏனென்றால், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருந்ததாக சுவிசேஷ புத்தகம் சொல்கிறது” என இயேசுவின் காலத்தில் அன்றாட வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது.
இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில்
கி.பி. 33-ன் வசந்த காலத்தில், நிசான் 14-ஆம் நாளில், பஸ்கா பண்டிகை அன்று இயேசு மரணமடைந்தார்; அந்தத் தேதியிலிருந்து பின்னோக்கிக் கணக்கிட்டால் அவர் எப்போது பிறந்தார் எனத் தோராயமாகத் தெரிந்துகொள்ளலாம். (யோவான் 19:14-16) இயேசு தன்னுடைய மூன்றரை வருட ஊழியத்தைத் தொடங்கியபோது அவருக்குச் சுமார் 30 வயது; அப்படியானால், கி.மு. 2 இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில் அவர் பிறந்திருக்க வேண்டும்.—லூக்கா 3:23.
கிறிஸ்மஸ் ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது?
இயேசு கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோதிலும், கிறிஸ்மஸ் ஏன் அந்தத் தேதியில் கொண்டாடப்படுகிறது? இயேசுவின் பிறந்த நாள் கொண்டாட்டமும், குளிர்கால பண்டிகை காலத்தில் கொண்டாடப்படுகிற “புறமத ரோமப் பண்டிகையும், அதாவது ‘வெல்லப்படாத சூரியனின் பிறந்தநாள்’ கொண்டாட்டமும், ஒரே நாளில் இருக்க வேண்டும்” என்பதற்காக சர்ச் தலைவர்கள் அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என என்ஸைக்ளோப்பீடியா ப்ரிட்டானிக்கா சொல்கிறது. தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குறிப்பிடுகிறபடி, “கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்குக் கிறிஸ்தவ மதத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு” அந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என நிறைய அறிஞர்கள் நம்புகிறார்கள்.