ஆபாசத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? சைபர் செக்ஸ் தவறா?
பைபிள் தரும் பதில்
ஆபாசப் படங்களைப் பார்ப்பது, ஆபாசமான விஷயங்களை வாசிப்பது, சைபர் செக்ஸில் ஈடுபடுவது போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பைபிள் நேரடியாக எதுவும் சொல்வதில்லை. ஆனாலும், மணத்துணை அல்லாத ஒருவருடன் பாலுறவுகொள்ளத் தூண்டுகிற செயல்களையும், பாலுறவைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தையும் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதை பைபிள் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இந்த பைபிள் வசனங்களைக் கவனியுங்கள்:
‘அதனால், பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்.’ (கொலோசெயர் 3:5) ஆபாசப் படங்களைப் பார்ப்பது, தவறான ஆசைகளை அழித்துப்போடுவதற்குப் பதிலாக, அந்த ஆசைகளை கொழுந்துவிட்டு எரியும்படி செய்கிறது. அதோடு, கடவுளுடைய கண்களில் ஒருவரை அசுத்தமானவராக, அதாவது அசிங்கமானவராக, ஆக்கிவிடுகிறது.
“ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன் அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.” (மத்தேயு 5:28) ஒழுக்கக்கேடான பாலியல் காட்சிகளும் படங்களும் ஒருவருடைய மனதில் தவறான எண்ணங்களைத் தூண்டிவிட்டு, தவறான செயல்களில் ஈடுபட வைத்துவிடும்.
“பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.” (எபேசியர் 5:3) ஜாலிக்காகக்கூட செக்ஸ் பற்றிய ஒழுக்கக்கேடான விஷயங்களைப் பேசக் கூடாது; அப்படிப் பேசுவதே தவறு என்றால், அவற்றைப் பார்ப்பதும் வாசிப்பதும்கூட மிகப் பெரிய தவறுதான்.
“பாவ இயல்புக்குரிய செயல்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை . . . போன்றவையாகும். இதுபோன்ற காரியங்களைச் செய்து வருகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உங்களை ஏற்கெனவே எச்சரித்தது போல இப்போதும் எச்சரிக்கிறேன்.” (கலாத்தியர் 5:19-21) ஆபாசப் படங்களைப் பார்க்கிற... ஆபாசப் புத்தகங்களை வாசிக்கிற... சைபர் செக்ஸ், ஃபோன் செக்ஸ், செக்ஸ்டிங் ஆகியவற்றில் ஈடுபடுகிற... ஆட்களைக் கடவுள் அசுத்தமானவர்களாக, ஒழுக்கங்கெட்டவர்களாகக் கருதுகிறார். இப்படிப்பட்ட காரியங்களை நாம் தொடர்ந்து செய்துவந்தால், கடவுளுடைய தயவைச் சுத்தமாக இழந்துவிடுவோம்.