அக்கினிக் கடல் என்பது என்ன? நரகமும் இதுவும் ஒன்றா? கெஹென்னாவும் இதுவும் ஒன்றா?
பைபிள் தரும் பதில்
அக்கினிக் கடல், அதாவது நெருப்பு ஏரி, என்பது நிரந்தர அழிவுக்கு அடையாளமாக இருக்கிறது. கெஹென்னாவும் இதுவும் ஒன்றுதான், ஆனால் நரகமும், அதாவது மனிதர்களுடைய பொதுக் கல்லறையும், இதுவும் வேறு வேறு.
நிஜ ஏரி அல்ல
“நெருப்பு ஏரி” பற்றிக் குறிப்பிடுகிற ஐந்து பைபிள் வசனங்களும் அது ஓர் அடையாளப்பூர்வ ஏரி என்பதையே காட்டுகின்றன; எனவே, அது ஒரு நிஜ ஏரி அல்ல. (வெளிப்படுத்துதல் 19:20; 20:10, 14, 15; 21:8) பின்வருபவை அந்த நெருப்பு ஏரியில் தள்ளப்படுவதாக வசனங்கள் சொல்கின்றன:
பிசாசு. (வெளிப்படுத்துதல் 20:10) ஆவி உடலைக் கொண்ட பிசாசை நெருப்பினால் சுட்டெரிக்க முடியாது.—யாத்திராகமம் 3:2; நியாயாதிபதிகள் 13:20.
மரணம். (வெளிப்படுத்துதல் 20:14) மரணம் என்பது ஒரு நபரோ பொருளோ கிடையாது; அது செயல்பட முடியாத நிலைமையை, அதாவது உயிரற்ற நிலைமையை, குறிக்கிறது. (பிரசங்கி 9:10) மரணத்தை நெருப்பினால் சுட்டெரிக்க முடியாது.
‘மூர்க்க மிருகம்’ மற்றும் “போலித் தீர்க்கதரிசி.” (வெளிப்படுத்துதல் 19:20) இவை வெறும் அடையாளங்களாக இருப்பதால், இவை தள்ளப்படுகிற ஏரியும்கூட அடையாளப்பூர்வ ஏரியாகத்தான் இருக்க வேண்டும்.—வெளிப்படுத்துதல் 13:11, 12; 16:13.
நிரந்தர அழிவுக்கு அடையாளம்
இந்த நெருப்பு ஏரி “இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 20:14; 21:8) பைபிள் குறிப்பிடுகிற முதலாம் மரணம் ஆதாம் செய்த பாவத்தினால் வந்தது. இந்த மரணத்தை உயிர்த்தெழுதல் மூலம் தலைகீழாக மாற்ற முடியும், கடைசியில் இது கடவுளால் ஒழித்துக்கட்டப்படும்.—1 கொரிந்தியர் 15:21, 22, 26.
அடையாளப்பூர்வ நெருப்பு ஏரியிலிருந்து விடுதலையே கிடையாது
நெருப்பு ஏரி என்பது வேறொரு வகையான, அதாவது இரண்டாம் வகையான, மரணத்தைக் குறிக்கிறது. இதுவும்கூட செயல்பட முடியாத நிலைமையைக் குறிக்கிறது. வேறுபாடு என்னவென்றால், இந்த மரணத்திற்குப்பின் உயிர்த்தெழுதல் இருப்பதாக பைபிள் சொல்வதில்லை. உதாரணமாக, “மரணத்தின் சாவியும் கல்லறையின் சாவியும்” இயேசுவிடம் இருப்பதாக பைபிள் சொல்கிறது; ஆதாமின் பாவத்தினால் மரணமடைகிற ஆட்களை அதிலிருந்து விடுவிக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதென்பதை இது காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 1:18; 20:13, தமிழ் O.V.) ஆனால், நெருப்பு ஏரியின் சாவி இயேசுவிடமும் கிடையாது, வேறு யாரிடமும் கிடையாது. இந்த அடையாளப்பூர்வ ஏரி நிரந்தர தண்டனையை, அதாவது அழிவை, குறிக்கிறது.—2 தெசலோனிக்கேயர் 1:9.
இன்னோம் பள்ளத்தாக்கை, அதாவது கெஹென்னாவை, போன்றது
பைபிளின் மூலப்பிரதியில் கெஹென்னா (கிரேக்கில் கெயென்னா) என்ற வார்த்தை 12 தடவை வருகிறது. நெருப்பு ஏரியைப் போலவே இதுவும் நிரந்தர அழிவுக்கு அடையாளமாக இருக்கிறது. சில மொழிபெயர்ப்புகள் இந்த வார்த்தையை “நரகம்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. ஆனால், கெஹென்னா என்பது வேறு, நரகம் (எபிரெயுவில் ஷியோல், கிரேக்கில் ஹைடிஸ்) என்பது வேறு.
“கெஹென்னா” என்ற வார்த்தை “இன்னோம் பள்ளத்தாக்கை” குறிக்கிறது; இது எருசலேம் மதிலுக்கு வெளியே இருந்த ஒரு பள்ளத்தாக்கு. பைபிள் காலங்களில், எருசலேம் நகரவாசிகள் இந்தப் பள்ளத்தாக்கில்தான் குப்பைக்கூளங்களைக் கொட்டினார்கள். அந்தக் குப்பைக்கூளங்களை எரிப்பதற்காக அங்கே எப்போதும் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது; நெருப்பு பரவாத இடத்திலிருந்த குப்பைக்கூளங்களை புழுக்கள் தின்றுதீர்த்தன.
கெஹென்னா என்ற வார்த்தையை இயேசு நிரந்தர அழிவுக்கு அடையாளமாகப் பயன்படுத்தினார். (மத்தேயு 23:33) “கெஹென்னாவில் புழுக்கள் சாவதில்லை, நெருப்பும் அணைவதில்லை” என்று அவர் சொன்னார். (மாற்கு 9:47, 48) இப்படி, இன்னோம் பள்ளத்தாக்கில் இருக்கிற நிலைமையை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல், ஏசாயா 66:24-ல் உள்ள இந்தத் தீர்க்கதரிசனத்தையும் மறைமுகமாகக் குறிப்பிட்டார்: “எனக்கு அடங்கி நடக்காதவர்களின் பிணங்கள் வெளியே கிடப்பதை அவர்கள் பார்ப்பார்கள். அந்தப் பிணங்களின் மேலுள்ள புழுக்கள் சாகாது. அங்கே எரியும் நெருப்பு அணையாது.” இயேசு சொன்ன இந்த உதாரணம், சித்திரவதையை அல்ல, முழுமையான அழிவையே குறிக்கிறது. புழுக்களும் நெருப்பும் பிணங்களைத்தான் விழுங்கின, உயிரோடு இருந்தவர்களை அல்ல.
கெஹென்னாவிலிருந்து ஆட்கள் திரும்பி வருவார்கள் என பைபிள் எங்கேயுமே சொல்வதில்லை. “நெருப்பு ஏரி,” “கொழுந்துவிட்டு எரிகிற கெஹென்னா”—இந்த இரண்டுமே நிரந்தர... நித்திய... அழிவையே குறிக்கின்றன.—வெளிப்படுத்துதல் 20:14, 15; 21:8; மத்தேயு 18:9.
“என்றென்றுமாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள்”—எந்த அர்த்தத்தில்?
நெருப்பு ஏரி என்பது அழிவுக்கு அடையாளமாக இருக்கிறதென்றால், பிசாசும், மூர்க்க மிருகமும், போலித் தீர்க்கதரிசியும் அதில் “இரவும் பகலும் என்றென்றுமாகச் சித்திரவதை செய்யப்படுவார்கள்” என்று பைபிள் ஏன் சொல்கிறது? (வெளிப்படுத்துதல் 20:10) இது நிஜமான சித்திரவதையைக் குறிப்பதில்லை என்பற்கு நான்கு காரணங்களைக் கவனியுங்கள்:
என்றென்றுமாகச் சித்திரவதை செய்யப்பட வேண்டுமானால், பிசாசு என்றென்றும் உயிரோடு வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவன் அழிக்கப்படுவான், அதாவது எங்கும் இல்லாதடி ஒழித்துக்கட்டப்படுவான், என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 2:14.
முடிவில்லாத வாழ்வு என்பது கடவுள் கொடுக்கிற பரிசு, அது தண்டனை அல்ல.—ரோமர் 6:23.
அடையாளங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள மூர்க்க மிருகமும் போலித் தீர்க்கதரிசியும் நிஜமான சித்திரவதையை அனுபவிக்க முடியாது.
பிசாசு சித்திரவதை செய்யப்படுவது அவன் நிரந்தரமான கட்டுப்பாட்டில் வைக்கப்படுவதை அல்லது நிரந்தரமாக அழிக்கப்படுவதைக் குறிக்கிறது என்பதையே பைபிள் வசனங்களின் சூழமைவு சுட்டிக்காட்டுகிறது.
“சித்திரவதை” என்பதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை “கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள நிலைமையைக்கூட” அர்த்தப்படுத்தலாம். உதாரணத்திற்கு, மத்தேயு 18:34-ல் உள்ள, ‘வதைக்கிறவர்கள்’ (பொ.மொ.) என்பதற்கான கிரேக்க வார்த்தையை நிறைய மொழிபெயர்ப்புகள் ‘சிறைக்காவலர்கள்’ என்று மொழிபெயர்த்துள்ளன; “சித்திரவதை” என்ற வார்த்தைக்கும், “கட்டுப்பாட்டில் வைக்கப்படுதல்” என்ற வார்த்தைக்கும் இடையே உள்ள தொடர்பை இது எடுத்துக் காட்டுகிறது. அதேபோல், மத்தேயு 8:29 மற்றும் லூக்கா 8:30, 31-ல் உள்ள இணைப் பதிவுகள், “சித்திரவதை” என்ற வார்த்தைக்கும், “அதலபாதாளம்” என்ற வார்த்தைக்கும் இடையே உள்ள தொடர்பை எடுத்துக் காட்டுகின்றன. அதலபாதாளம் என்பது செயல்படவே முடியாத நிலைமையை அல்லது மரணத்தைக் குறிக்கிறது. (ரோமர் 10:7; வெளிப்படுத்துதல் 20:1, 3) “சித்திரவதை” என்ற வார்த்தையை வெளிப்படுத்துதல் புத்தகம் அடையாள அர்த்தத்தில்தான் பலமுறை பயன்படுத்தியிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:7, 10.