குடும்ப ஸ்பெஷல்
மதுபானத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுங்கள்
“எங்க பொண்ணுக்கு 6 வயசு இருந்தப்ப முதல் முறையா நாங்க மதுபானத்த பத்தி அவக்கிட்ட பேசுனோம். ஆச்சரியம் என்னன்னா, நாங்க நெனச்சதவிட அவளுக்கு அத பத்தி நெறய தெரிஞ்சிருந்தது.”—அலெக்ஸாண்டர்.
நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டியவை
பிள்ளைகளிடம் மதுபானத்தைப் பற்றி பேசுவது ரொம்ப முக்கியம். மதுபானத்தைப் பற்றிப் பேச உங்கள் பிள்ளை டீனேஜ் வயதை எட்டும்வரை காத்திருக்காதீர்கள். “என்னோட பையன்கிட்ட சின்ன வயசுலயே மதுபானத்த பத்தி பேசியிருந்தா நல்லா இருந்திருக்கும். அப்படி பேசுறது எவ்ளோ முக்கியங்கிறத கசப்பான அனுபவத்துக்கு அப்புறம்தான் புரிஞ்சிக்கிட்டேன். என்னோட 13 வயசு பையனுக்கு குடிப்பழக்கம் இருக்குனு எனக்கு தெரியவந்துச்சு” என்று சொல்கிறார் ரஷ்யாவைச் சேர்ந்த ஹொமிட்.
மதுபானத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுவது ஏன் முக்கியம்?
பிள்ளைகள் மதுபானத்தைப் பற்றி யோசிக்கும் விதத்தை கூடப்படிப்பவர்கள், விளம்பரங்கள், மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மாற்றிவிடலாம்.
அமெரிக்காவில் மட்டும் மதுபானம் பயன்படுத்துவதில் 11 சதவீதம் பேர், மதுபானம் குடிக்க அனுமதியிருக்கும் வயதுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் சொல்கின்றன.
மதுபானத்தைப் பயன்படுத்துவதால் வரும் ஆபத்துகளைப் பற்றி பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே பயிற்சி கொடுக்க வேண்டும் என்று உடல்நலப் பராமரிப்பு அதிகாரிகள் சொல்வதில் ஆச்சரியம் இல்லை. அதை எப்படிச் செய்யலாம்?
நீங்கள் என்ன செய்யலாம்
பிள்ளைகள் என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்று முன்னதாகவே யோசியுங்கள். சின்ன பிள்ளைகள் ஆர்வமாக கேட்பார்கள், பெரிய பிள்ளைகள் ரொம்ப ஆர்வமாக கேட்பார்கள். அதனால், நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை முன்னதாகவே தயாரியுங்கள். உதாரணத்துக்கு:
மதுபானத்துடைய ருசியைப் பற்றி பிள்ளை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தால், நீங்கள் ஒருவேளை இப்படிச் சொல்லலாம்: ‘ஒயின் பழ ஜுஸவிட கொஞ்சம் புளிப்பா இருக்கும், பீர் கொஞ்சம் கசப்பா இருக்கும்’ என்று சொல்லலாம்.
உங்கள் பிள்ளை மதுபானத்தை ருசிக்க ஆசைப்பட்டால், “சின்ன பிள்ளைங்களுக்கு அத தாங்கிக்கிற சக்தி இல்ல” என்று சொல்லலாம். அப்படிக் குடித்தால் வரும் ஆபத்துகளைப் பற்றி சொல்லுங்கள்: மதுபானம் குடிப்பது ஒரு நபரை ரிலாக்ஸாக இருக்க செய்யலாம். ஆனால், தலை சுற்றும், முட்டாள்தனமாக நடந்துகொள்ள செய்யலாம், பிறகு வருத்தப்பட வைக்கும் விதத்தில் பேசவும் செய்யலாம்.—நீதிமொழிகள் 23:29-35.
நீங்களும் கற்றுகொள்ள வேண்டும். “சாமர்த்தியசாலி அறிவோடு நடந்துகொள்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:16) மதுபானம் குடிப்பதால் வரும் பாதிப்புகளைப் பற்றியும், உங்கள் நாட்டில் அது சம்பந்தமாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் பிள்ளைக்கு உதவ நீங்கள் தயாராக இருக்க முடியும்.
இதைப் பற்றி பேச நீங்கள் முதல் படி எடுங்கள். “மதுபானத்தை பயன்படுத்துறத பத்தி சின்ன பிள்ளைங்களுக்கு சரியா புரியாம இருக்கலாம்” என்று பிரிட்டனை சேர்ந்த மார்க் என்ற அப்பா சொல்கிறார். “குடிக்கிறது சரியா தப்பானு என்னோட எட்டு வயசு பையன்கிட்ட கேட்டேன். அவன் ரிலாக்ஸா இருக்குற சமயத்தில இதபத்தி கேட்டேன். அவன் மனசில இருக்கிறத என்கிட்ட சொல்றதுக்கு இது ரொம்ப உதவியா இருந்துச்சு” என்றும் அவர் சொல்கிறார்.
மதுபானத்தைப் பற்றி அவர்களிடம் பலமுறை பேசும்போது, நீங்கள் சொல்லித்தருவது அவர்கள் மனதில் ஆழமாகப் பதியும். சாலைப் பாதுகாப்பு, செக்ஸ் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசும்போது மதுபானத்தைப் பற்றியும் பேசுங்கள். உங்கள் பிள்ளையின் வயதைப் பொருத்து இப்படிச் செய்யுங்கள்.
முன்மாதிரி வையுங்கள். ஸ்பான்ஞ் எப்படி அதைச் சுற்றி இருப்பதை உறிஞ்சிவிடுமோ அப்படித்தான் பிள்ளைகளும் தங்களைச் சுற்றி இருப்பவர்களைப் போலவே நடந்துகொள்கிறார்கள். மற்றவர்களைவிட பெற்றோர்களைப் பார்த்துதான் பிள்ளைகள் அதிகம் கற்றுகொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால், மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் மதுபானத்தை பயன்படுத்தினீர்கள் என்றால், பிரச்சினைகளுக்கு மதுதான் மருந்து என்று உங்கள் பிள்ளை முடிவுக்கட்டிவிடும். அதனால், நீங்கள் நல்ல முன்மாதிரி வையுங்கள். மதுபானத்தைச் சரியாக பயன்படுத்துவது உங்கள் பொறுப்பு.