Skip to content

குடும்ப ஸ்பெஷல்

பொறுமையை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

பொறுமையை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

 “கணவன் மனைவியின் பொறுமை ஒவ்வொரு நாளும் சோதிக்கப்படலாம். பொறுமையாக இருப்பது எவ்வளவு அவசியம் என்பது கல்யாணம் ஆவதற்கு முன்பு உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கல்யாணம் ஆனதற்குப் பிறகு, பொறுமையாக இருந்தால்தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.”—ஜான்.

 உங்களுக்கு ஏன் பொறுமை தேவை?

  •    கல்யாணத்துக்குப் பிறகு உங்கள் கணவன் அல்லது மனைவியின் குறைகள் பளிச்செனத் தெரியலாம்.

     “கல்யாணமாகி கொஞ்ச நாளைக்கு அப்புறம் உங்க துணையோட குறைகள் உங்களுக்கு பளிச்சுன்னு தெரிய ஆரம்பிக்கலாம். இப்படி குறைகளையே பார்த்துட்டு இருந்தா பொறுமை காட்டுறது கஷ்டம்தான்.”—ஜெசீனா.

  •    பொறுமையாக இல்லையென்றால் யோசிக்காமல் பேசிவிடுவீர்கள்.

     “என் மனசுல என்ன தோணுதோ அத அப்படியே பேசிடுவேன். சிலசமயங்கள்ல பேசக் கூடாததயெல்லாம் பேசிடுவேன். நான் இன்னும் பொறுமையா இருந்திருந்தா உண்மையிலேயே அப்படி பேசணுமான்னு யோசிச்சிருப்பேன், பேசாமகூட விட்டிருப்பேன்.”—கார்மன்.

     “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:4) ஒருவரையொருவர் நேசிப்பவர்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நியாயம்தான். ஆனால், எல்லா சமயங்களிலும் அப்படி நடப்பது கிடையாது. “மத்த நல்ல குணங்கள மாதிரியே பொறுமைய வளர்க்கறதும் கஷ்டம், ஆனா அத இழக்கறது ரொம்ப சுலபம். தொடர்ந்து பொறுமைய வளர்த்துக்குறதுக்கு முயற்சி தேவை” என்று சொல்கிறார் ஜான்.

 நீங்கள் எப்படிப் பொறுமையைக் காட்டலாம்?

  •    எதிர்பார்க்காமல் நடக்கிற ஏதோவொன்று உங்கள் பொறுமையைச் சோதிக்கும்போது...

     உதாரணம்: உங்கள் கணவனோ மனைவியோ உங்கள் மனதைப் புண்படுத்துகிற விதத்தில் ஏதாவது சொல்லிவிடலாம். பதிலுக்கு அதேபோல் ஏதாவது சொல்ல வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றலாம்.

     பைபிள் நியமம்: “சட்டென்று கோபப்படாதே. இது முட்டாளின் அடையாளம்.”—பிரசங்கி 7:9, அடிக்குறிப்பு.

     பொறுமையாக இருப்பது எப்படி? அவசரப்பட்டுப் பேசிவிடாதீர்கள். உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் கணவனோ மனைவியோ அப்படிப் பேசினார் என்று நினைக்காதீர்கள். “நம்மில் நிறைய பேர், நம்முடைய துணை உண்மையிலேயே என்ன சொன்னார் அல்லது என்ன சொல்ல வந்தார் என்று யோசிக்காமல் நாமாகவே ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு கோபப்பட ஆரம்பித்துவிடுவோம்” என்று கல்யாண வாழ்க்கையைக் கட்டிக்காக்க போராடுதல் என்ற புத்தகம் (ஆங்கிலம்) சொல்கிறது.

     உங்களுடைய துணை உங்களைப் புண்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தால்கூட, பதிலடி கொடுக்காமல் நீங்கள் பொறுமையாக இருந்தால் உங்களுக்குள் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக்கொள்ள முடியும். “விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 26:20.

     “உங்க மனைவிய எதிரி மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டீங்கனா உடனடியா அந்த எண்ணத்த விட்டுட்டு, அவங்கள நீங்க ஏன் நேசிச்சீங்கனு யோசிச்சுபாருங்க. அப்புறம், அவங்கள சந்தோஷப்படுத்துற மாதிரி ஏதாவது பண்ணுங்க.”—ஈத்தன்.

     யோசித்துப்பாருங்கள்:

    •  உங்கள் கணவனோ மனைவியோ புண்படுத்தும் விதத்தில் ஏதாவது சொல்லும்போது அல்லது செய்யும்போது நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள்?

    •  அடுத்த தடவை அதே சூழ்நிலை வரும்போது நீங்கள் எப்படி இன்னுமதிக பொறுமையைக் காட்டலாம்?

  •    உங்கள் துணை ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து உங்கள் பொறுமையைச் சோதிக்கும்போது...

     உதாரணம்: உங்கள் துணை எப்போதுமே லேட்டாக வந்து உங்களை எரிச்சல்படுத்தலாம்.

     பைபிள் நியமம்: “தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள்.”—கொலோசெயர் 3:13.

     பொறுமையாக இருப்பது எப்படி? உங்களைப் பற்றி மட்டுமே யோசிக்காமல் உங்கள் கல்யாண வாழ்க்கையை எப்படிப் பாதுகாக்கலாம் என்று யோசியுங்கள். “இந்த பிரச்சினைய பெரிசாக்குறதுனால நாங்க இன்னும் நெருங்கிவருவோமா இல்ல விலகிப்போவோமா?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்” என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (யாக்கோபு 3:2) அப்படியென்றால், நீங்களும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அர்த்தம்.

     “சிலசமயங்கள்ல என் ஃபிரண்டுகிட்டகூட பொறுமையா இருக்க முடியுது, ஆனா என் கணவர்கிட்ட பொறுமையா இருக்க முடியறது இல்ல. எப்பவுமே என் கணவர்கூட இருக்குறதுனால அவரோட குறைகளெல்லாம் எனக்கு நல்லா தெரியுதுன்னு நினைக்கிறேன். ஆனா பொறுமைங்கறது அன்புக்கும் மரியாதைக்கும் ஒரு அடையாளம். அதனால, என்னோட கல்யாண வாழ்க்கைக்கு பொறுமை ரொம்ப முக்கியம்.”—நியா.

     யோசித்துப்பாருங்கள்:

    •  உங்கள் துணையிடம் குறைகளைப் பார்க்கும் சமயங்களில் நீங்கள் எந்தளவு பொறுமையாக நடந்துகொள்கிறீர்கள்?

    •  இனிமேல் நீங்கள் எப்படி இன்னுமதிக பொறுமையைக் காட்டலாம்?