குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு
பதற வைக்கும் செய்திகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள்
கதிகலங்க வைக்கிற செய்திகளுக்கு இன்றைக்கு பஞ்சமே இல்லை. இந்த மாதிரி செய்திகளை டிவி-யில், ஃபோனில், டேப்லெட்டில், கம்ப்யூட்டரில் எல்லாம் தத்ரூபமான வீடியோ காட்சிகளோடு 24 மணிநேரமும் போடுகிறார்கள்.
பிள்ளைகளும் அதைக் கண்கொட்டாமல் பார்க்கிறார்கள்.
இந்த மாதிரி செய்தி அறிக்கைகளைப் பார்த்து உங்கள் பிள்ளைகள் மனம் பதறாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
செய்திகள் பிள்ளைகளை எப்படிப் பாதிக்கின்றன?
செய்திகளில் காட்டப்படுகிற, சோக சம்பவங்களைப் பார்த்து நிறைய பிள்ளைகள் சோர்ந்துபோகிறார்கள். பிள்ளைகள் சிலர் தங்களுடைய மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். ஆனால் அவர்கள் பார்க்கிற விஷயங்கள் அவர்களுடைய மனதைப் பயங்கரமாக அலைக்கழிக்கலாம். a இந்த மாதிரி செய்திகளைக் கேட்டு அவர்களுடைய அப்பா அம்மாவும் கவலையில் மூழ்கிவிட்டால், பிள்ளைகளின் நிலைமை இன்னும் மோசமாகிவிடலாம்.
செய்திகளில் பார்க்கிற விஷயங்களைப் பிள்ளைகள் தப்பாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, தாங்கள் பார்க்கிற விஷயங்கள் தங்களுடைய குடும்பத்துக்கு நடந்துவிடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். சின்ன பிள்ளைகள் இந்த மாதிரி வீடியோக்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கும்போது, இப்படிப்பட்ட சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.
செய்திகளில் பார்க்கிற விஷயங்களைப் பிள்ளைகள் அப்படியே நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. செய்தி நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்காகவோ, நிறைய பேரைக் கவர வேண்டும் என்பதற்காகவோ ஒரு சம்பவத்தைப் பரபரப்பு ஏற்படுத்துகிற மாதிரி போடுகிறார்கள். இதெல்லாம் பிள்ளைகளுக்குத் தெரியாது.
பதற்றப்படாமல் இருக்க பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
அதிர்ச்சியூட்டுகிற செய்திகளைப் பிள்ளைகள் அடிக்கடி பார்க்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். அதற்காக பிள்ளைகள் வெளி உலகமே தெரியாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அதேசமயத்தில் இந்த மாதிரி செய்திகளை எல்லாம் பிள்ளைகள் திரும்பத் திரும்ப கேட்பதாலும் பார்ப்பதாலும் எந்தப் பிரயோஜனமும் இல்லை.
“சிலசமயம் நாங்க செய்திகள பத்தி ரொம்ப விலாவாரியா பேசுவோம். அதை கேட்குற எங்க பிள்ளைகளோட மனசு எந்தளவுக்கு பாதிக்கும்னு நாங்க யோசிக்கவே இல்ல.”—மரியா.
பைபிள் ஆலோசனை: “கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும்.”—நீதிமொழிகள் 12:25.
பொறுமையாகக் கேளுங்கள், புரிந்து நடந்துகொள்ளுங்கள். பயங்கரமான ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்வது உங்கள் பிள்ளைக்குக் கஷ்டமாக இருந்தால், அதை வரைந்து காட்டச் சொல்லுங்கள். இந்த விஷயத்தில் பிள்ளைகளுக்கு உதவி செய்யும்போது, அவர்களுக்குப் புரியும் விதத்தில் பேசுங்கள். அந்த சம்பவத்தைப் பற்றிய தேவையில்லாத விஷயங்களை எல்லாம் சொல்லாதீர்கள்.
“‘உலகம்னா அப்படிதான் இருக்கும். அதுக்கு நம்மதான் பழகிக்கணும்’-னு சொல்றதுக்கு பதிலா, என் பொண்ணுகூட உட்கார்ந்து, அவ சொல்றத காது கொடுத்துக் கேட்டது அவளுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு.”—சராயி
பைபிள் ஆலோசனை: “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.”—யாக்கோபு 1:19.
செய்தி அறிக்கைகளைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுங்கள். உதாரணத்துக்கு, கடத்தல் சம்பந்தமான செய்தி அறிக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். செய்திகளில் அதைக் காட்டும் விதம், எங்கேயோ நடக்கிற இதுபோன்ற சம்பவங்கள் எப்போதுமே நம்மைச் சுற்றி நடப்பதுபோல் பிள்ளைகளை யோசிக்க வைத்துவிடலாம். அதனால், பிள்ளைகளின் பாதுகாப்புக்காக நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். இன்னொரு விஷயத்தையும் பிள்ளைகளின் மனதில் பதிய வையுங்கள். அடிக்கடி நடக்கிற விஷயத்தை அல்ல, எப்போதாவது நடக்கிற ஒரு விஷயத்தைத்தான் செய்திகளில் காட்டுவார்கள் என்று சொல்லுங்கள்.
“பிள்ளைகளோட பயத்த போக்குறதுக்கு உதவி செய்யுங்க. பொதுவா பயத்துக்கு காரணமே, அவங்க யோசிக்கிற விஷயங்கள்தான். அதனால, ஏதாவது நல்ல விஷயங்கள யோசிக்கிறதுக்கு பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்க. அப்போதான் அவங்களால பயம் இல்லாம சந்தோஷமா இருக்க முடியும்.”—லூர்டஸ்
பைபிள் ஆலோசனை: “ஞானமுள்ளவனின் இதயம் அவனை விவேகமாகப் பேச வைக்கிறது. பக்குவமாகப் பேசி மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமையைக் கொடுக்கிறது.”—நீதிமொழிகள் 16:23.
a சின்ன பிள்ளைகளாக இருந்தால், பயத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடலாம். இன்னும் சில பிள்ளைகள் அப்பா அம்மா இல்லாமல் தனியாக ஸ்கூலுக்குப் போகப் பயப்படலாம்.