இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | யோபு
“என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்”
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை கொப்புளங்களால் நிறைந்த ஒருவர் தரையில் உட்கார்ந்திருக்கிறார். அவருடைய தலை குனிந்தும் தோள்கள் சரிந்தும் இருக்கின்றன. தனிமையில் அவர் வாடுகிறார். தன்னைச் சுற்றி மொய்க்கும் ஈக்களை விரட்டுவதற்குக்கூட அவரிடம் தெம்பில்லை. தன்னுடைய துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக அவர் சாம்பலில் உட்கார்ந்திருக்கிறார். உடைந்த ஒரு ஓட்டை வைத்து தன்னுடைய உடம்பைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார். அவர் இழந்தது கொஞ்சநஞ்சம் கிடையாது! அவருடைய மதிப்புமரியாதையும் போய்விட்டது!! நண்பர்கள், அக்கம்பக்கத்தார், சொந்தக்காரர்கள் என்று எல்லாரும் அவரைக் கைவிட்டுவிட்டார்கள். மக்கள் அவரைக் கிண்டல் செய்தார்கள்; பிள்ளைகள்கூட அவரை விட்டுவைக்கவில்லை. தன்னுடைய கடவுளான யெகோவாவும் தன்னைக் கைவிட்டுவிட்டதாக அவர் நினைத்தார். ஆனால், அவர் நினைத்தது உண்மை இல்லை.—யோபு 2:8; 19:18, 22.
யோபுதான் அந்த மனிதர்! “பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை” என்று அவரைப் பற்றி யெகோவா சொன்னார். (யோபு 1:8) பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும்கூட, யோபுவை நீதிமான்களில் ஒருவராக யெகோவா கருதினார்.—எசேக்கியேல் 14:14, 20.
கஷ்டங்களும் எதிர்பாராத வேதனைகளும் உங்களை இடியாய்த் தாக்குகின்றனவா? அப்படியென்றால், யோபுவின் வாழ்க்கை வரலாறு உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். அதோடு, கடவுளுடைய உண்மை ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய ஒரு குணத்தைப் பற்றியும் அது சொல்லும். உத்தமம்தான் அந்தக் குணம்! அடுத்தடுத்து கஷ்டங்கள் வந்தாலும் முழு பக்தியோடு கடவுளுக்குப் பிடித்ததைத் தொடர்ந்து செய்யும்போது நாம் உத்தமமாக இருக்கிறோம் என்று அர்த்தம். யோபுவிடமிருந்து நாம் இப்போது நிறைய கற்றுக்கொள்ளலாம்.
யோபுவுக்குத் தெரியாத விஷயங்கள்
உண்மையுள்ள மனிதனான மோசே, யோபுவின் வாழ்க்கை வரலாறை எழுதினார். அநேகமாக, யோபு இறந்து கொஞ்சக் காலத்துக்குப் பிறகு அவர் அதை எழுதியிருக்கலாம். பூமியில் நடந்த விஷயங்களை மட்டுமல்ல, பரலோகத்தில் நடந்த சில விஷயங்களையும் கடவுளுடைய தூண்டுதலால் மோசே எழுதினார்.
யோபுவின் கதை சந்தோஷமாக ஆரம்பிக்கிறது. ஊத்ஸ் தேசத்தில் (அநேகமாக, வட அரேபியாவில்) அவர் செல்வச் சீமானாக இருந்தார். எல்லாருடைய மதிப்புமரியாதையையும் சம்பாதித்திருந்தார். ஏழைகளுக்கு அவர் தாராளமாக உதவினார். ஆதரவு இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவருக்குப் பத்து பிள்ளைகள் இருந்தார்கள். எல்லாவற்றையும்விட, யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தம் அவருக்கு இருந்தது. தன்னுடைய தூரத்து சொந்தங்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு ஆகியவர்களைப் போலவே யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதுதான் அவருடைய முக்கியக் குறிக்கோளாக இருந்தது. இந்த மூதாதைகளைப் போலவே தன்னுடைய குடும்பத்துக்கு யோபு குருவாகச் செயல்பட்டார். தன்னுடைய பிள்ளைகளுக்காகத் தவறாமல் பலிகளைச் செலுத்திவந்தார்.—யோபு 1:1-5; 31:16-22.
இப்போது, காட்சி பரலோகத்தின் பக்கமாகத் திரும்புகிறது. யெகோவாவின் உண்மையுள்ள தேவதூதர்கள் அவருக்கு முன்பாக ஒன்றுகூடி இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில், பொல்லாத தூதனான சாத்தான் உள்ளே நுழைகிறான். நீதிமானான யோபுவை சாத்தானுக்குச் சுத்தமாகப் பிடிக்காது என்பது யெகோவாவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், யோபுவின் உத்தமத்தைப் பற்றி சாத்தானிடம் யெகோவா மெச்சிப் பேசினார். அப்போது சாத்தான், “யோபு சும்மாவா உங்களுக்குப் பயந்து நடக்கிறான்? நீங்கள்தான் அவனையும் அவன் வீட்டையும் அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் சுற்றி வேலிபோட்டு அவனைப் பாதுகாக்கிறீர்களே” என்று சொன்னான். எவ்வளவு துணிச்சல் இருந்திருந்தால் அவன் இப்படிச் சொல்லியிருப்பான்! யெகோவாவுக்கு உத்தமமாக இருக்கிறவர்கள், சாத்தான் எவ்வளவு பெரிய துரோகி என்பதை வெளிச்சம்போட்டு காட்டுகிறார்கள். அதனால், உத்தமமாக இருக்கிற ஒவ்வொருவரையும் சாத்தான் வெறுக்கிறான். சுயநலத்துக்காகத்தான் யோபு யெகோவாவுக்குச் சேவை செய்கிறார் என்று சொன்னான். ஒருவேளை யோபு எல்லாவற்றையும் இழந்துவிட்டால், யெகோவாவைச் சபிப்பார் என்று அவன் சொன்னான்.—யோபு 1:6-11.
பரலோகத்தில் நடந்த எந்த விஷயங்களும் யோபுவுக்குத் தெரியாது. ஆனால், சாத்தான் சொன்னதெல்லாம் சுத்தப் பொய் என்று நிரூபிக்கும் அருமையான வாய்ப்பை யெகோவா அவருக்குக் கொடுத்தார். யோபுவுக்குக் கஷ்டங்களைக் கொடுப்பதற்கு சாத்தானுக்கு அவர் அனுமதி கொடுத்தார். ஆனால், யோபுவின் மேல் கை வைக்கக் கூடாது என்று சொன்னார். இப்போது, தன்னுடைய கொடூரமான செயல்களை ஆரம்பிப்பதற்காக சாத்தான் கிளம்புகிறான். ஒரே நாளில், யோபுவுக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டத்தைக் கொடுக்கிறான். முதலில், தன்னுடைய மாடுகளையும் கழுதைகளையும் யோபு இழக்கிறார். பிறகு, ஆடுகளை இழக்கிறார். அதற்குப் பிறகு, தன்னிடம் இருந்த ஒட்டகங்களையும் இழந்துவிடுகிறார். இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த விலங்குகளை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வேலைக்காரர்களும் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் ஒருவன் மட்டும் தப்பித்து வந்து, “கடவுள் . . . நெருப்பை அனுப்பி” எல்லாவற்றையும் கொன்றுவிட்டார் என்று யோபுவிடம் சொல்கிறான். (அது ஒருவேளை மின்னலாக இருக்கலாம்.) இவற்றையெல்லாம் ஜீரணிப்பதற்குள்ளாகவே இன்னொரு செய்தி யோபுவை இடிபோல் தாக்குகிறது. அவருடைய மூத்த மகனின் வீட்டில் அவருடைய எல்லா பிள்ளைகளும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சூறாவளி காற்று அந்த வீட்டைத் தாக்கியதால், யோபுவின் பிள்ளைகள்மேல் அது இடிந்து விழுந்தது. அதில், அவருடைய பத்து பிள்ளைகளும் பலியானார்கள்!—யோபு 1:12-19.
யோபு எவ்வளவு இடிந்துபோயிருப்பார் என்பதை நம்மால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது! தன்னுடைய உடைகளை அவர் கிழித்துக்கொண்டார்... முடியை வெட்டிக்கொண்டார்... நிலைகுலைந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிட்டார். கடவுள் கொடுத்ததைக் கடவுளே எடுத்துக்கொண்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சொல்லப்போனால், இந்தக் கஷ்டங்களையெல்லாம் கடவுள்தான் கொடுத்தார் என்று யோபு நினைக்க வேண்டும் என்பதற்காக சாத்தான் திறமையாகக் காய்களை நகர்த்தினான். ஆனால், அவனுடைய திட்டம் பலிக்கவில்லை. கடவுளைச் சபித்து யோபு பேசவே இல்லை. அதற்குப் பதிலாக, “யெகோவாவின் பெயருக்கு என்றும் புகழ் சேரட்டும்” என்றுதான் சொன்னார்.—யோபு 1:20-22.
“அவன் உங்களைத் திட்டித் தீர்ப்பான்”
இவ்வளவு நடந்தும் யோபு உத்தமமாக இருப்பதைப் பார்த்து சாத்தானுக்கு இன்னும் வெறி அதிகமானது. பரலோகத்தில் தேவதூதர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடி இருக்கும் சமயத்தில் சாத்தானும் யெகோவாவுக்கு முன்பாக வந்து நின்றான். யோபுவின் மீது சாத்தான் இவ்வளவு தாக்குதல் நடத்தியும் அவர் உத்தமமாக இருப்பதைப் பார்த்து யெகோவா அவரை மறுபடியும் புகழ்ந்து பேசினார். அதற்கு சாத்தான் கோபமாக, “ஒரு மனுஷன் எந்த உயிரையும்விட தன்னுடைய உயிரைத்தான் பெரிதாக நினைப்பான். அதைக் காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான். அதனால், நீங்கள் அவனுடைய எலும்பையும் சதையையும் தொட்டுப் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே உங்களைத் திட்டித் தீர்ப்பான்” என்று சொன்னான். யோபுவுக்கு ஏதாவது நோய் வந்தால் அவர் தன் உத்தமத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான். ஆனால், யோபுவை யெகோவா நம்பினார். நோயைக் கொடுத்து யோபுவைச் சோதிப்பதற்கு சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார். ஆனால், அவருடைய உயிரை மட்டும் எடுக்கக் கூடாது என்று சொன்னார்.—யோபு 2:1-6.
இப்போது, யோபுவின் உடலில் சாத்தான் கை வைக்கிறான். முதல் பாராவில் பார்த்த நிலைமைக்கு யோபு வந்துவிடுகிறார். அவருடைய மனைவியின் பரிதாபமான நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பத்து பிள்ளைகளை இழந்த துக்கத்தில் அவள் ஏற்கெனவே தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தாள். அதுபோதாதென்று, தன்னுடைய கணவர் அனுபவிக்கும் வேதனைகளைப் பார்த்து அவளுடைய இதயமே பிளந்துபோயிருக்கும். தன்னால் எதையுமே செய்ய முடியவில்லையே என்று நினைத்து அவள் ரொம்பவே வருத்தப்பட்டிருப்பாள். வேதனை தாங்க முடியாமல், “இன்னுமா கடவுள் கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்? அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போங்கள்” என்று சொன்னாள். பொதுவாக, அவள் இப்படிப் பேசும் ஒரு நபர் கிடையாது. அதனால், அவள் யோசிக்காமல் பேசுவதாக யோபு சொன்னார். இவ்வளவு நடந்தும் கடவுளை யோபு திட்டவே இல்லை. தன்னுடைய வாயால் பாவமும் செய்யவில்லை.—யோபு 2:7-10.
யோபுவின் இந்தச் சோகக் கதைக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சாத்தான் என்ன சொன்னான் என்று பாருங்கள். “மனுஷன் . . . தன்னுடைய உயிரை . . . காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான்” என்று சொன்னான். இதிலிருந்து, யோபுவின் மீது மட்டுமல்ல மனிதர்கள் எல்லார்மீதும் இந்தக் குற்றச்சாட்டை அவன் சுமத்தியிருக்கிறான் என்று தெரிகிறது. அதாவது, ‘மனுஷங்களால உத்தமமா இருக்க முடியாது’ என்று அவன் சொல்கிறான். உங்களுக்கு கடவுள்மேல் உண்மையிலேயே அன்பு இல்லை என்று அவன் சொல்கிறான். உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நீங்கள் கடவுளை விட்டுக்கொடுத்து விடுவீர்கள் என்றும் அவன் சொல்கிறான். இப்படி, அவனைப் போலவே நாமும் சுயநலவாதிகள் என்று சொல்கிறான். அவன் சொல்வது சுத்தப் பொய் என்று நிரூபிக்க விரும்புகிறீர்களா? அதைச் செய்வதற்கான வாய்ப்பு நம் எல்லாருக்குமே இருக்கிறது. (நீதிமொழிகள் 27:11) யோபுவை அவன் எப்படியெல்லாம் மறுபடியும் சோதித்தான் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆறுதல் என்ற பெயரில் யோபுவின் மனதைக் குத்திக் கிழித்தவர்கள்
யோபுவுக்கு நன்றாகப் பழக்கமான மூன்று பேர், அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் கேள்விப்பட்டு, ஆறுதல் சொல்வதற்காகப் பயணம் செய்து வந்தார்கள். இவர்களை யோபுவின் நண்பர்கள் என்று பைபிள் சொல்கிறது. தூரத்திலிருந்து பார்த்தபோது அவர்களால் யோபுவை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நோயால் அவருடைய உடம்பெல்லாம் கறுத்துப்போய் இருந்தது. சுத்தமாக அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறியிருந்தார். எலிப்பாஸ், பில்தாத், சோப்பார்தான் அந்த மூன்று நண்பர்கள். இவர்கள் யோபுவைப் பார்த்து வேதனைப்படுவதுபோல் காட்டிக்கொண்டார்கள். மண்ணை வாரி தலையில் போட்டுக்கொண்டு சத்தமாக ஒப்பாரி வைத்தார்கள். ஒரு வாரம் முழுவதும் ராத்திரி பகலாக, ஒன்றுமே பேசாமல் யோபுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஆறுதல்படுத்துவதற்காக அவர்கள் அப்படி உட்கார்ந்துகொண்டிருக்கவில்லை. ஏனென்றால், அவருடைய சூழ்நிலையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வெறுமனே அவர் வலியில் துடித்துக்கொண்டிருந்தது மட்டும்தான் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.—யோபு 2:11-13; 30:30.
ஒருவழியாக, யோபுவே பேச ஆரம்பிக்கிறார். வலி தாங்க முடியாமல் தான் பிறந்த நாளைச் சபிக்கிறார். (யோபு 3:1) தன்னுடைய கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணம் என்று அவர் நினைத்துவிட்டார். (யோபு 6:4) ஆனாலும், அவர் விசுவாசத்தை இழந்துவிடவில்லை. அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் ஆறுதலான வார்த்தைகள்தான்! இப்போது, அவர்களுடைய நண்பர்கள் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேச ஆரம்பித்த பிறகுதான், அவர்கள் மௌனமாக இருந்திருந்தாலே நன்றாக இருந்திருக்கும் என்று யோபு நினைக்கிறார்.—யோபு 13:5.
இப்போது, எலிப்பாஸ் பேச ஆரம்பிக்கிறார். மற்ற இரண்டு பேரையும்விட இவர் வயதில் மூத்தவராக இருந்திருக்கலாம். ஏன், யோபுவைவிட ரொம்ப மூத்தவராக இருந்திருக்கலாம். அதற்குப் பிறகு, மற்ற இரண்டு பேரும் பேச ஆரம்பிக்கிறார்கள். சொல்லப்போனால், எலிப்பாஸ் பேசியதுபோல் இவர்களும் முட்டாள்தனமாகப் பேசினார்கள். கடவுள் ரொம்ப உன்னதமானவர், கெட்டவர்களை அவர் தண்டிக்கிறார், நல்லவர்களுக்குப் பலன் கொடுக்கிறார் என்று சொன்னார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அவர்கள் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று தோன்றலாம். ஆனால், ஆரம்பத்திலிருந்தே அவர்கள் அன்பில்லாமல்தான் பேசினார்கள். கடவுள் நல்லவர் என்றும் கெட்டவர்களைத் தண்டிக்கிறவர் என்றும் எலிப்பாஸ் சொன்னார். யோபு இப்போது கஷ்டப்படுவதால், அவர் கண்டிப்பாக ஏதாவது தவறு செய்திருப்பார் என்று சொல்லாமல் சொன்னார். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, அவர் ஏதோ நியாயமாக பேசுவதுபோல் தெரியலாம். ஆனால், முக்கியமான உண்மைகளை அவர் மறந்துவிட்டார்.—யோபு 4:1, 7, 8; 5:3-6.
எலிப்பாஸ் சொன்ன குற்றச்சாட்டுகளை யோபு ஏற்றுக்கொள்ளவில்லை. (யோபு 6:25) யோபு ஏதோ தப்பு செய்துவிட்டு அதை மூடி மறைக்கிறார் என்று மூன்று பேரும் நினைத்தார்கள். அவர் செய்த தவறுகளுக்குத்தான் தண்டனையை அனுபவிக்கிறார் என்றும் சொன்னார்கள். யோபு அகங்காரம் பிடித்தவர், கெட்டவர், கடவுள் பக்தியில்லாதவர் என்று எலிப்பாஸ் குற்றம்சாட்டினார். (யோபு 15:4, 7-9, 20-24; 22:6-11) கெட்ட புத்தியை மாற்றிக்கொள்ளச் சொல்லியும், பாவம் செய்வதை விட்டுவிடச் சொல்லியும் சோப்பார் சொன்னார். (யோபு 11:2, 3, 14; 20:5, 12, 13) ஆனால் பில்தாத் சொன்னது, இவர்கள் இரண்டு பேரும் சொன்னதைவிட கொடுமையாக இருந்தது. அதாவது, யோபுவின் பிள்ளைகள் பாவம் செய்ததால்தான் செத்துப்போனார்கள் என்று சொன்னார்.—யோபு 8:4, 13.
உத்தமம் கேள்விக்குள்ளானது!
இந்த மூன்று பேரும் இன்னும் மோசமான விஷயங்களைப் பேசினார்கள். அதாவது, யோபுவின் உத்தமத்தைப் பற்றி மட்டும் கேள்வி எழுப்பவில்லை. உத்தமமாக இருப்பதற்கு முயற்சி செய்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றும் சொன்னார்கள். எலிப்பாஸ் பேச ஆரம்பித்தபோது, ஏதோவொரு உருவத்தைப் பார்த்ததாகவும், அதைப் பார்த்து குலைநடுங்கிப்போனதாகவும் சொன்னார். அந்த உருவம் பேசியதை வைத்து எலிப்பாஸ் இந்த முடிவுக்கு வந்தார்: “கடவுள் தன்னுடைய ஊழியர்களை நம்புவதே இல்லை. தன்னுடைய தூதர்களிடமே குறை கண்டுபிடிக்கிறார்.” எலிப்பாஸ் நினைத்தது மட்டும் உண்மையாக இருந்திருந்தால், சாதாரண மனிதர்களால் கடவுளைச் சந்தோஷப்படுத்தவே முடியாது! பிறகு, யோபு உத்தமமாக இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கடவுளுக்கு அக்கறை இல்லையென்றும், அவருடைய பார்வையில் யோபு ஒரு சின்ன புழு மாதிரிதான் இருக்கிறார் என்றும் பில்தாத் சொன்னார்.—யோபு 4:12-18; 15:15; 22:2, 3; 25:4-6.
வேதனையில் மூழ்கி இருப்பவர்களை ஆறுதல்படுத்த நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்களா? அது அவ்வளவு சுலபம் இல்லை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அப்படியென்றால், அவர்களிடம் என்ன சொல்லக் கூடாது என்பதை யோபுவின் மூன்று நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். புத்திசாலித்தனமாகவும், நியாயமாகவும் பேசியதாக அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், யோபுவை அவர்கள் கரிசனையோடு நடத்தவில்லை. பெயர் சொல்லிக்கூட அவரைக் கூப்பிடவில்லை. காயம்பட்ட அவருடைய நெஞ்சத்தை மென்மையான வார்த்தைகளால் ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் துளிகூட அவர்களுக்கு இருக்கவில்லை. * நமக்கு என்ன பாடம்? யாராவது ஒருவர் வேதனையில் துவண்டுபோயிருந்தால் அவர்களிடம் இதமாக, அன்பாக, அக்கறையாகப் பேசுங்கள். அவர்களுடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் அதிகமாக்குங்கள். கடவுள்மீது நம்பிக்கை வைக்க அவர்களுக்கு உதவுங்கள். அதுமட்டுமல்ல, கடவுள் அன்பானவர், இரக்கமானவர், நீதியானவர் என்பதை நம்புவதற்கு உதவுங்கள். தன்னுடைய மூன்று நண்பர்களுடைய இடத்தில் இருந்திருந்தால் யோபு இதைத்தான் செய்திருப்பார். (யோபு 16:4, 5) அந்த மூன்று பேரும் யோபுவின் உத்தமத்தைக் குறிவைத்து தொடர்ந்து தாக்கியபோது அவர் என்ன செய்தார்?
யோபு உறுதியாக இருக்கிறார்
தன்னுடைய நண்பர்கள் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே யோபு நொந்துபோயிருந்தார். ஆரம்பத்திலிருந்தே ‘ஏதேதோ பேசிவிட்டதாகவும்’ ‘விரக்தியில் பேசிவிட்டதாகவும்’ யோபு சொன்னார். (யோபு 6:3, 26) துக்கம் தாங்காமல்தான் அவர் அப்படிப் பேசினார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதோடு, இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் இருந்த முழு விவரங்களும் யோபுவுக்குத் தெரிந்திருக்கவில்லை. தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் திடீரென்று பிரச்சினைகள் தாக்கியதாலும், அந்தப் பிரச்சினைகளுக்கு இயற்கை சக்திகள் காரணமாக இருக்கலாம் என்று அவர் நினைத்ததாலும், யெகோவாதான் இதற்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆனால், யோபுவுக்குத் தெரியாத சில முக்கியமான விஷயங்கள் இதில் அடங்கியிருந்தன. இதெல்லாம் யோபுவுக்குத் தெரியாது! அதனால், அவர் தவறான முடிவுக்கு வந்துவிட்டார்.
இவ்வளவு நடந்தும் யோபுவின் விசுவாசம் ஆட்டங்காணவே இல்லை. அவர் பேசிய வார்த்தைகளிலிருந்து இது தெரிகிறது. அந்த வார்த்தைகள் உண்மையானவை, அழகானவை, இன்றுவரை நம்மை உற்சாகப்படுத்துபவை. படைப்புகளில் இருக்கும் அற்புதங்களைப் பற்றிப் பேசி அவர் கடவுளை மகிமைப்படுத்தினார். கடவுளுடைய உதவியில்லாமல் எந்த மனிதனாலுமே அவற்றைப் பற்றியெல்லாம் சொல்லியிருக்க முடியாது! உதாரணத்துக்கு, யெகோவா “பூமியை அந்தரத்தில் தொங்கவிட்டார்” என்று அவர் சொன்னார். இந்த உண்மையை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். * (யோபு 26:7) தன்னுடைய எதிர்கால நம்பிக்கையைப் பற்றிப் பேசியபோது, தன்னுடைய முன்னோர்களுக்கு இருந்த அதே நம்பிக்கை தனக்கு இருந்ததை அவர் காட்டினார். ஒருவேளை தான் இறந்துவிட்டால் கடவுள் தன்னை ஞாபகம் வைத்திருப்பார் என்றும், தன்னைப் பார்ப்பதற்கு அவர் ஏங்குவார் என்றும், ஒருநாள் கண்டிப்பாகத் தன்னை உயிரோடு எழுப்புவார் என்றும் யோபு நம்பினார்.—யோபு 14:13-15; எபி. 11:17-19, 35.
மனிதன் உத்தமமாக இருப்பதைக் கடவுள் பெரிதாக நினைப்பதில்லை என்று எலிப்பாசும் அவருடைய இரண்டு நண்பர்களும் சொன்னார்கள். அவர்களுடைய கருத்தை யோபு ஒதுக்கித்தள்ளினார். மனிதன் உத்தமமாக இருப்பதைக் கடவுள் உயர்வாக மதிக்கிறார் என்று சொன்னார். “நான் உத்தமன் என்று [யெகோவா] புரிந்துகொள்வார்” என்று நம்பிக்கையோடு சொன்னார். (யோபு 31:6) தன்னுடைய உத்தமத்தை தன்னுடைய நண்பர்கள் கேள்விக்குள்ளாக்கியதை யோபு புரிந்துகொண்டார். அதனால், தன் பக்கம் இருந்த நியாயத்தை நேரம் எடுத்து அவர்களிடம் சொன்னார். இதன் மூலம் அவர்களுடைய வாயை அடைத்தார்.
உத்தமம் என்பது அன்றாட வாழ்க்கையில் காட்ட வேண்டிய ஒரு குணம் என்பது யோபுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், தான் வாழ்ந்த விதத்தைத் தன்னுடைய நண்பர்களிடம் விளக்கினார். உதாரணத்துக்கு, சிலை வழிபாடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவர் ஒதுக்கித்தள்ளினார். மற்றவர்களை அன்பாக, மரியாதையாக நடத்தினார். கற்புக்கரசனாக இருந்தார். திருமண பந்தத்தை உயர்வாக மதித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரே உண்மைக் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு பக்தி காட்டினார். அதனால்தான், “சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்” என்று முழு இதயத்தோடு அவரால் சொல்ல முடிந்தது.—யோபு 27:5; 31:1, 2, 9-11, 16-18, 26-28.
யோபுவின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
உத்தமமாக இருப்பதை நீங்களும் முக்கியமாக நினைக்கிறீர்களா? உத்தமமாக இருப்பதாக வெறும் வாயளவில் சொன்னால் மட்டும் போதாது என்பதையும், அதைச் செயலில் காட்டுவது முக்கியம் என்பதையும் யோபு புரிந்துவைத்திருந்தார். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலமாகவும் அவருடைய பார்வையில் சரியானதைச் செய்வதன் மூலமாகவும் அவருக்கு நாம் முழு பக்தியைக் காட்டலாம். அப்படிக் காட்டினால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு யோபு செய்ததைப் போலவே நம்மாலும் யெகோவாவை நிச்சயம் சந்தோஷப்படுத்த முடியும். சாத்தானுக்கு பதிலடி கொடுக்கலாம். யோபு மாதிரியே விசுவாசத்தைக் காட்டுவதற்கு இதைவிட வேறு ஏதாவது வழி இருக்க முடியுமா?
யோபுவின் கதை இதோடு முடிந்துவிடவில்லை. சிலசமயங்களில் அவர் சரியாக யோசிக்கவில்லை. முக்கியமான விஷயங்களை மறந்துவிட்டு தான் நீதிமான் என்று நிரூபிப்பதிலேயே குறியாக இருந்தார். அதனால் அவர் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டியிருந்தது. எல்லா விஷயத்தையும் கடவுள் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டியிருந்தது. இன்னொரு பக்கம், தாங்க முடியாத வலியையும் வேதனையையும் அனுபவித்ததால் உண்மையான ஆறுதலும் அவருக்குத் தேவைப்பட்டது. அப்படியென்றால், விசுவாசத்தோடும் உத்தமத்தோடும் இருந்த யோபுவுக்கு யெகோவா எப்படி உதவினார்? இதற்கான பதிலை இந்தத் தொடர் கட்டுரையின் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
^ பாரா. 17 தானும் தன்னுடைய நண்பர்களும் குரலை உயர்த்திப் பேசாததால், தாங்கள் மென்மையாகப் பேசியதாக எலிப்பாஸ் நினைத்துக்கொண்டார். (யோபு 15:11) ஆனால், மெதுவாகப் பேசுகிற வார்த்தைகள்கூட மற்றவர்களுடைய இதயத்தைக் கிழிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
^ பாரா. 19 நமக்குத் தெரிந்தவரை, கிட்டத்தட்ட 3000 வருஷங்களுக்குப் பிறகுதான், எந்தப் பொருளும் பூமியைத் தாங்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். விண்வெளிக்குப் போய் பூமியை புகைப்படம் எடுத்த பிறகுதான் யோபுவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை மனிதர்கள் புரிந்துகொண்டார்கள்.