Skip to content

யாருடைய கைவண்ணம்?

கார்பென்டர் எறும்பு தன் உணர்கொம்பைச் சுத்தம் செய்யும் விதம் ஓர் அற்புதம்!

கார்பென்டர் எறும்பு தன் உணர்கொம்பைச் சுத்தம் செய்யும் விதம் ஓர் அற்புதம்!

ஒரு பூச்சி பறப்பதற்கும், மேலே ஏறி செல்வதற்கும், அதைச் சுற்றி இருப்பவற்றை நுகர்வதற்கும் சுத்தமாக இருப்பது ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, ஒரு எறும்பின் உணர்கொம்பில் அழுக்கு படிந்திருந்தால், வழியைக் கண்டுபிடிப்பதும், மற்ற எறும்புகளுடன் தொடர்புகொள்வதும், வாசனைகளை நுகர்வதும் அதற்குக் கஷ்டமாகிவிடும். அதனால் விலங்கியல் நிபுணராக இருக்கும் அலெக்ஸாண்டர் ஹாக்மேன் இப்படிச் சொல்கிறார்: “ஒரு அழுக்குப் பூச்சியை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது. அழுக்காக இருக்கும் நிலத்தில்கூட தன்னைச் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை அது தெரிந்துவைத்திருக்கிறது.”

யோசித்துப் பாருங்கள்: கார்பென்டர் எறும்பின் ஒரு இனம் (கேம்பொனோடஸ் ரஃபிஃபிமர்) எப்படித் தன்னுடைய உணர்கொம்பைச் சுத்தப்படுத்திக்கொள்கிறது என்பதைப் பற்றி ஹாக்மேனும் அவருடைய கூட்டாளிகளும் ஆராய்ச்சி செய்தார்கள். இந்த இனத்தைச் சேர்ந்த எறும்பு தன் உணர்கொம்பில் ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்குத் துகள்களைச் சுத்தப்படுத்த, அதன் காலை மடித்து, ஒரு இடுக்கியால் பிடிப்பது போல அதன் உணர்கொம்பு ஒவ்வொன்றையும் காலின் நடுவில் பிடித்து இழுப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவைப் பெரிதாக இருந்தாலும் சரி, மிகச் சிறிதாக இருந்தாலும் சரி இப்படித்தான் சுத்தப்படுத்துகிறது. முதலாவதாக, அந்த எறும்பின் காலில் இருக்கும் கரடுமுரடான முடிகள் உணர்கொம்பில் இருக்கும் பெரிய பெரிய அழுக்குத் துகள்களை நீக்குகின்றன. அடுத்ததாக, சீப்பில் இருக்கும் நெருக்கமான பற்களைப் போல எறும்பின் காலில் நெருக்கமாக இருக்கும் மெல்லிய முடிகள் உணர்கொம்பில் இருக்கும் சிறிய அழுக்குத் துகள்களைச் சுத்தப்படுத்துகின்றன. ஆச்சரியம் என்னவென்றால், உணர்கொம்பில் இருக்கும் முடிகளின் அகலமும் எறும்பின் காலில் இருக்கும் மெல்லிய முடிகளின் இடைவெளியும் ஒரே அளவில் இருக்கின்றன. மூன்றாவதாக, பிரஷில் இருக்கும் மிகச் சிறிய முடிகள் போல எறும்பின் காலிலும் மிகச் சிறிய முடிகள் இருக்கின்றன. அவை ஒரு மனித தலைமுடியின் சுற்றளவில் எண்பதில் ஒரு பாகமாக இருக்கும் மிகச் சிறிய அழுக்குத் துகள்களைக்கூட உணர்கொம்பிலிருந்து துடைத்து சுத்தப்படுத்துகின்றன.

ஒரு கார்பென்டர் எறும்பு தன் உணர்கொம்பை எப்படிச் சுத்தம் செய்கிறது என்று பாருங்கள்

இந்த எறும்பு தன் உணர்கொம்பைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தும் முறையைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தினால் நிறைய பலன்கள் கிடைக்கும் என்று ஹாக்மேனும் அவருடைய குழுவில் இருக்கிறவர்களும் நினைக்கிறார்கள். உதாரணத்துக்கு, மென்மையான மிகச் சிறிய மின் கருவிகளையும், செமிகண்டக்டர்களையும் தயாரிக்கும்போது அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு, இந்த எறும்பு சுத்தம் செய்வதைப் போன்ற ஒரு முறையைப் பயன்படுத்துவது நல்ல பலன்களைத் தரும். ஏனென்றால் இவை ரிப்பேர் ஆகாமல் இருக்க கொஞ்சம்கூட அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கார்பென்டர் எறும்பு தன் உணர்கொம்பைச் சுத்தம் செய்யும் விதம் நம்மை வியக்க வைக்கிறது. இது பரிணாமத்தினால் தோன்றியிருக்குமா? அல்லது வடிவமைக்கப்பட்டிருக்குமா?